தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரின் முன்பு ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவியர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் ட்ரெக்கிங் சென்றனர். அதற்கு முன்னதாக குரங்கணி வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ட்ரெக்கிங் சென்றவர்கள் கொழுக்குமலையில் இருந்து மீண்டும் குரங்கணிக்குத் திரும்பியபோது, எதிர்பாராத விதமாகக் காட்டுத் தீக்கு இடையே சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தினர். தீயில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இதுவரை தீயில் சிக்கிப் பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மீட்புப் பணிக்கு வந்த ஹெலிகாப்டர் போடி ஸ்பைசஸ் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்ட ஆசிரியர் பயிற்சி மாணவியர் அங்கிருந்த ஹெலிகாப்டரை நோக்கி வரிசையாகச் சென்று, ஹெலிகாப்டரின் அருகில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்கத் தொடங்கினர். தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மாணவியரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.