பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் வேலை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலாது என திட்டவட்டமாக நீதிபதிகள் கூறியுள்ளார். 

ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் 4-வது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் போராட்டத்தை தடை விதிக்கக்கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த 11-ம் வகுப்பைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் ஆசிரியர்கள் அனைவரும் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், பணிக்கு வராத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. 

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப தான் உத்தரவிட்டோம். போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை என்று நீதிபதிகள் கூறினர்