ஆசிரியர்கள் போராட்டம்: தமிழக அரசு எடுக்கும் முடிவு!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ வளாகம்), ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதேபோல், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர்கள் மாதம் ரூ.10,000 ஊதியம் பெறும் நிலையில், ரூ.2000 உயர்த்தி ரூ.12,000 ஆக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் கடந்த 2012ஆம்ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2014ஆம் ஆண்டு ரூ.2000 ஊதியம் உயர்த்தப்பட்டது. பின்னர், 2017ஆம் ஆண்டு ரூ. 700 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூ.2,300 ஊதியம் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.10,000 தொகுப்பூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கான ஊதியத்தில், ரூ.2000 உயர்த்தி ரூ.12,000 ஆக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இவர்களது பிரதான கோரிக்கை பணி நிரந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2013ஆம் ஆண்டில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையும் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை; கோரிக்கைக்கு நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.