ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரி்க்கையை வலியுறுத்தி ஜனவரி 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்தது. இவர்களது போராட்டத்தை ஒடுக்க தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களுக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இன்று மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 97% பேர் பணிக்கு திரும்பியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 31ம் தேதியன்று சம்பளம் வழங்க வேண்டிய நிலையில், அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்ட சம்பள பட்டியலை அரசு திரும்ப பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இரவு 7 மணி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது 17b நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்காத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும், அப்போது தான் நாளை சம்பளம் கிடைக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.