விடுமுறையில் வீட்டு பாடம் எழுதாமல் சென்ற 4ம் வகுப்பு மாணவியை, 2 ஆசிரியர்கள் பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால், அவரது கை வீங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தால், போலீசார் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். இவரது மனைவி சுகந்தி. இவர்களது மகள் கல்பனா (9). காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். (செய்தியில் அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.).

அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாணவி கல்பனா, பள்ளிக்கு சென்றாள். அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்கள் 2 பேர், விடுமுறை நாட்களில் வீட்டு பாடம் எழுதும் படி கூறியதாக தெரிகிறது. ஆனால், கல்பனா அதை சரிவர எழுதாமல் இருந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர்கள், மாணவியை கண்டிப்பதாக கூறி, சரமாரியாக பிரம்பால் தாக்கியுள்ளனர். இதில், சிறுமியின் கைகள் வீக்கம் அடைந்தது. மாலையில் வீட்டுக்கு சென்றபோது, மகளின் கைகளை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியைடைந்தனர்.

அடுத்தநாள் இதுபற்றி பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, எவ்வித பதிலும் கூறவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பெற்றோர், பாலுச்செட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார், அவர்களது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு எலும்பு முறிவு பிரிவில் சிறுமி கல்பனா, சிகிசிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளிக்கு நிதி தேவை என்றால், மாணவர்களின் பெற்றோருக்கு போன் அல்லது மெசேஜ், கடிதம் எழுதும், பள்ளி நிர்வாகம், அவர்கள் சரிவர படிக்கவில்லை என்றால் ஏன் தெரியப்படுத்துவது இல்லை. பள்ளி நிர்வாகம், மாணவர்களை கண்டிக்கலாம். அடிக்கலாம். அதற்காக கொலை முயற்சியில் ஈடுபட கூடாது.

அதேபோல் போலீசாரும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும்போது, அதனை விசாரிக்க வேண்டும். ஏன் மறுக்கிறார்கள். அவர்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு பள்ளியில் படிப்பார்கள். அவர்களுக்கு இதுபோல் நடந்தால், சும்மா இருப்பார்களா? “நான் ஒரு போலீஸ்காரன். என் மகனையே அடித்தாயா…” என கேட்டு, உயர் அதிகாரிகள் வரை செல்வார்களே. பிறகு ஏன் இந்த விஷயத்தில் பாரபட்சம்.

எனவே, இந்த சம்பவத்தில் பள்ளி கல்வி துறையும், மாவட்ட எஸ்பி, கலெக்டர் ஆகியோர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று மற்ற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்யவேண்டும் என்றனர்.