Asianet News TamilAsianet News Tamil

வெளுத்து வாங்கும் கோடை வெயிலால் கருகும் தேயிலை செடிகள்; விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை...

Tea plants drought by summer hot Farmers worry about yield loss ...
Tea plants drought by summer hot Farmers worry about yield loss ...
Author
First Published Apr 16, 2018, 8:59 AM IST


நீலகிரி

வெளுத்து வாங்கும் கோடை வெயிலால் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறதே என்று விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. நீர் நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான பொதுகுடிநீர் கிணறுகளில் தண்ணீர் வற்ற தொடங்கியுள்ளன. இதனால் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்காத நிலையில் தற்போது அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக தேயிலை விளைச்சலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

தோட்டங்களில் ஈரத்தன்மை இல்லாமல் வறண்டுவிட்டதால் பச்சை தேயிலை விளைச்சல் குறைந்து வருகிறது. வழக்கமாக மழைக் காலங்களில் தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 40 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை வரத்து இருக்கும். ஆனால், இந்த கோடையில் வெயில் தாக்கம் அதிகமாகிவிட்டதால் தொழிற்சாலைகளுக்கு பாதி அளவு கூட பச்சை தேயிலையை அனுப்ப முடியவில்லை. 


கோடை மழை அடிக்கடி பெய்யும் தேயிலை செடிகளை பாதுகாத்து விடலாம் என்று நினைத்த விவசாயிகளின் கனவும் சுக்குநூறானது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதில் சிறு விவசாயிகள் மட்டுமின்றி சிறு குறு மற்றும் பெரிய தோட்ட நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.

தேயிலை செடிகள் கருகி வருவதால் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலை தோட்ட உரிமையாளர்களும் கவலை அடைந்துள்ளனர். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட போதிய வருவாய் கிடைக்காததால் சிறு குறு மற்றும் பெரிய தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios