தமிழக மக்கள் ஏன் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்? நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கேள்வி!
தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் வரி பகிர்வின் கூடுதல் தவணைத் தொகை ரூ.1,42,122 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இரு முறை வரி பகிர்வு தொகை விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது முறையாக மாநில அரசுகளுக்கான நிதியை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதி பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.25,495 கோடியும், குறைந்தபட்சமாக கோவா மாநிலத்துக்கு ரூ.549 கோடியும் நிதி பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், தமிழகத்துக்கு குறைவாகவும், உத்தரப்பிரதேசத்துக்கு அதிகமகவும் நிதி பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வரிப்பகிர்வில் தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில், “உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்தாலும், உத்தரப்பிரதேசத்தை விட கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி குறைவான வரிப் பகிர்வாக தமிழ்நாடு ரூ.5,797 கோடிகளை மட்டுமே பெறுகிறது. தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள வரிப்பகிர்வின்படி, உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.25,495 கோடி பீகார் ரூ.14,295 கோடி, மத்தியப்பிரதேசம் ரூ.11,157 கோடி, மேற்குவங்கம் ரூ.10,692 கோடி, மஹாராஷ்டிரா ரூ. 8,978 கோடி, ராஜஸ்தான் ரூ.8,564 கோடி, ஒடிசா ரூ.6,435 கோடி, தமிழ்நாடு ரூ.5,797 கோடி, ஆந்திரா ரூ.5,752 கோடி, கர்நாடகா ரூ 5,183 கோடி, குஜராத் ரூ.4,943 கோடி, சத்தீஸ்கர் ரூ.4,842 கோடி, ஜார்கண்ட் ரூ.4,700, அசாம் ரூ.4,446 கோடி, தெலங்கானா ரூ.2,987 கோடி,கேரளா ரூ.2,736 கோடி, பஞ்சாப் ரூ.2,568 கோடி, அருணாசலப்பிரதேசம் ரூ.2,497 கோடி, உத்தரகாண்ட் ரூ.1,589 கோடி, ஹரியானா ரூ. 1,553 கோடி, இமாச்சலப்பிரதேசம் ரூ.1,180 கோடி, மேகாலயா ரூ.1,090 கோடி, மணிப்பூர் ரூ.1018 கோடி, திரிபுரா ரூ.1,006 கோடி, நாகலாந்து ரூ.809 கோடி, மிசோரம் ரூ.711 கோடி, சிக்கிம் ரூ.551 கோடி, கோவா ரூ.549 கோடி என மொத்தம் ரூ.1,42,122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.