டாஸ்மாக் கடை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல கடைகளின் அருகில் அமைந்துள்ள பார்கள், 24 மணி நேரமும் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதையொட்டி பார் உள்பகுதியில் திரைக்கு பின்னால் 2 அறையாக கட்டிடம் கட்டி தடை செய்யபட்ட லாட்டரி விற்பனை நடத்துகிறார்கள். 

ஏற்கனவே மதுவுக்காக பணத்தை இழக்கும் குடிமகன்கள், தற்போது கள்ள லாட்டரிக்கும் பணத்தை இழக்கும் நிலை அதிகரித்துவிட்டது. அதிகாரிகள் முதல் அரசியல் வாதிகள் வரை அனைவரையும் பணத்தால் கட்டி வைத்து, சட்டவிரோத மது விற்பனை மற்றும் தடை செய்யபட்ட லாட்டரி விற்பனையும் நடத்தி வருகிறார் பார் உரிமையாளர் பொண்னுச்சாமி என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊத்துக்குளி பகுதியில் கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக, லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. ரூ.30 ,ரூ.50, ரூ.100 வரை லாட்டரி சீட்டுகள் விற்பனை ஆகின்றன. ஒரு துண்டுச் 

சீட்டில் லாட்டரி சீட்டின் பெயரையும், நம்பரையும், தேதி போட்டு எழுதிக் கொடுக்கின்றனர். பரிசுத் தொகையோ, ரூ.10.000 முதல்  ரூ.1 லட்சம் வரை உண்டு. காவல் நிலையம் அருகில்  உள்ள கைத்தமலை கோவில் நுழைவாயில் உள்ள அடுக்குமாடி கட்டிட வாடகை கடைகள், காவல் நிலையம் பின்புறம் தனியார் மன்டபம் அருகில் ஒரு வீடு் தோட்டம் மற்றும் நகராட்சி பக்கம் உள்ள பெட்டி கடை, டீ கடை, கூலிபாளையம் அரசு மதுபான கடை ஆகிய பகுதிகளில் தான் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. 

லாட்டரிகளுக்கு தலைமையகம் கேரளா என்றாலும், அம்மாநில லாட்டரி சீட்டுகள் மட்டுமின்றி, லாட்டரிக்கு பெயர் பெற்ற மாநிலங்களான மணிப்பூர், மிசோராம், அஸ்ஸாம், நாகலாந்து போன்ற மாநில லாட்டரி சீட்டுகளும் இங்கே கனஜோராக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இணையதளம் மூலமாகத்தான் இங்கே இந்த லாட்டரி வியாபாரம் நடக்கிறது. தினமும் காலையில் குறிப்பிட்ட இடத்தில் கூடும் லாட்டரி பிரியர்கள், புரோக்கர்களிடம் லாட்டரி சீட்டுகளையும், முந்தைய நாளுக்கான ரிசல்ட் பேப்பர்களையும் வாங்கி, தங்களது நம்பர் இருக்கிறதா என பரிதவிப்புடன் முடிவுகளைப் பார்த்து வருவது காலக்கொடுமை! ஆளும் கட்சி பிரமுகரான கலையம்சம் பொருந்தியவர்தான் லாட்டரி தொழிலை நடத்துவதற்கு தொடர்ந்து உதவி வருகிறாராம். 

நாள்தோறும், பல லட்சங்கள் புழங்கும் இந்தத் தொழிலில், எந்தப் பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, மாதம்தோறும் பல லட்சங்கள் கை மாறுவதாக தெரிகிறது. மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள பெயரைக் கொண்டிருக்கும் மதுபான கூடம் நடத்துபவர்தான், ஊத்துக்குளி ஏரியாவில் லாட்டரி சீட்டு விற்பதற்கான லீசு எடுத்திருக்கிறார். 

இந்த லாட்டரி வியாபாரம், காவல் நிலையத்தில் இருந்து சரியாக 500 மீட்டர் இடைவெளியில் நடக்கிறது. இதனை மாவட்ட எஸ்பிக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும் ஊத்துக்குளி  போலீசாரின் சாமர்த்தியம் அருமை. சட்டவிரோதமாக நடத்துவது பார் உரிமையாளர் பொன்னுச்சாமி. இவரது வலது, இடது கரமாக செயல்படுவது ராஜா , காளிமுத்து ஆகியோர் மூலம் ஊத்துக்குளி பகுதியில் ரூ 500 சம்பளத்திற்க்கு 30 ஆட்களை வைத்து நடத்தி வருகிறார்கள். இதற்கான வீடியோ ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது.

 

3 நம்பர் டோக்கன் லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என்ற தடை இருந்தும், மக்கள் கூடும் இடங்களைக் குறிவைத்து  தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. ஏழைத் தொழிலாளர்களின் நலன் கருதி சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது, காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊத்துக்குளி பகுதி மக்களும் மது கூடத்திற்க்கு மது அருந்தவரும் மது பிரியர்களும் வலியுறுத்துகின்றனர்.