Asianet News TamilAsianet News Tamil

தார்ச்சாலை மரணம்; கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மக்கள்…

Tarccalai death Tributes and tears along the popular poster
tarccalai death-tributes-and-tears-along-the-popular-po
Author
First Published Mar 20, 2017, 8:17 AM IST


கிருஷ்ணராயபுரம்

கரூரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் மோசமாக இறப்பதால், தார்ச்சாலை மரணம் என்ற போஸ்டர் ஒட்டி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  

கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட இலட்சுமணம்பட்டி - பூவம்பாடி வரையிலான நான்கு கிலோ மீட்டர் தார்ச்சாலையும், சேங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட பூவம்பாடி - சின்னசேங்கல் வரையிலான ஒரு கிலோ மீட்டர் தார்ச்சாலையும் சேர்த்து மொத்தம் 5 கிலோ மீட்டர் வரை உள்ள இந்த தார்ச்சாலை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது.

சாலை போடப்பட்டதோடு சரி, அதன்பிறகு பராமரிப்பு என்று ஒன்று இல்லவே இல்லை. இதனால் கடந்த பத்து ஆண்டுகளாக தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

இந்த தார்ச்சாலையின் வழியாக கரூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்றும், வந்தும் இருக்கின்றன.

ஆனால், இந்த சாலை வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாகவே இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது இருட்டில் கீழே விழுந்து வாரும் சம்பவங்கள் தினமும் நடக்கிறது.

மழைக்காலம் வந்துவிட்டால் சாலைகளில் உள்ள குழிகளில் தண்ணீர் நிரம்பி சாலை எது, குழி எது என தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

நாள்தோறும் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் இந்த தார்ச்சாலை இன்று பயன்படுத்த முடியாத நிலையில் கேட்பாரற்று இருக்கிறது.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு தார்ச்சாலையை காணவில்லை, கண்டுப்பிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு என பரபரப்பு சுவரொட்டி அடித்து ஒட்டினர்.

இதனையடுத்து இந்த தார்ச்சாலையை அப்போதைய ஆட்சியர் ஜெயந்தி நேரில் பார்வையிட்டார். பின்னர், சேங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட பூவம்பாடி - சின்னசேங்கல் வரையிலான ஒரு கிலோ மீட்டர் தார்ச்சாலை மட்டும் புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட நான்கு கிலோ மீட்டர் வரையிலான தார்ச்சாலையை கண்டுகொள்ளாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தார்ச்சாலை அமைத்து தருவார்கள் என பொறுத்து, பொறுத்து அப்பகுதி பொதுமக்கள் தற்போது அடுத்த கட்டமாக தார்ச்சாலை இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடித்து பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தாலாவது அந்த சாலை சீரமைக்கப்படும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. 

Follow Us:
Download App:
  • android
  • ios