Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை அதிரவைக்கும் ‘தார்’ ஒப்பந்த ஊழல்… கான்ட்ராக்டர்கள் கூட்டு சேர்ந்து ரூ.1000 கோடி கொள்ளையடித்தது அம்பலம்!

Tar contract scam With the officers the contracts collided with a sum of Rs 1000 crore
Tar contract scam With the officers the contracts collided with a sum of Rs 1000 crore
Author
First Published Oct 15, 2017, 9:17 AM IST


தமிழகம் முழுவதும் கடந்த 2014, 2016ம் ஆண்டு  சாலை அமைப்பதற்காக வாங்கப்பட்ட ‘தார்’ ஒப்பந்தத்தில் ரூ. 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை வெளிக்கொண்டு வந்த சமூக ஆர்வலர் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள், தார் ஆகிய பொருட்கள் மிக முக்கியம். இதில் சாலை அமைக்கவும், பராமரிக்கவும் பெட்ரோலியத்தில் இருந்து கழிவு பொருளாக கிடைக்கும் ‘தார்’ வாங்கப்பட்டதில்தான் இந்த மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது.

தமிழகத்தின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், ஒபந்ததாரர்கள் சேர்ந்து கொண்டு கடந்த 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ரூ. 800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை கொள்ளையடித்து தெரியவந்துள்ளது.

இந்த ஊழலை சமூக ஆர்வலர் ஜி.பாலாஜி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்கான’ முறையில் நடந்துள்ள ஊழல் குறித்து அவர் கூறியதாவது-

முழுமையான சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் திட்டத்தின்(சி.ஆர்.ஐ.டி.பி.) மூலம் தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரம் கோடி நிதி பெற்று வருகிறது. இந்த தொகையில் பெரும்பாலானவை தார், உருக்கு, சிமென்ட் ஆகிய பொருட்கள் வாங்குவதற்கு செலவாகிவிடும்.

ஆனால், இதில் சாலை அமைக்க பயன்படும் ‘தார்’ பெட்ரோலியத்தில் இருந்து கழிவுப்பொருளாகக் கிடைப்பதாகும். பெட்ரோலிய நிறுவனங்கள் மாதம் தோறும் சந்தைச் சூழலுக்கு ஏற்ப  ‘தார்’ விலையை மாற்றி வருகின்றன.

அதாவது ஒப்பந்ததாரர்கள் கொள்முதல் செய்யும் ‘தார்’ பொருளுக்கு குறிப்பிட்ட அடிப்படை விலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும். இதில் திடீரென பெட்ரோலிய நிறுவனங்கள் ‘தார்’ விலையை உயர்த்தினால்,  அதற்குரிய கூடுதல் தொகை அரசு சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படும். அதேசமயம், ‘தார்’ விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் குறைத்தால் விலையில் உள்ள வேறுபாட்டு தொகையை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்பந்ததார்கள் திருப்பி அளிக்க வேண்டும்.

Tar contract scam With the officers the contracts collided with a sum of Rs 1000 crore

இந்த புள்ளியில்தான் ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் கூட்டாகச் சேர்ந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர்.

அதாவது கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு டன் தார் ரூ.41 ஆயிரத்து 360 ஆக இருந்தது. இந்த விலையில்தான் கடந்த 2014-15ம் ஆண்டு சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு மார்ச்சில் ‘தார்’ விலை டன்னுக்கு ரூ.30 ஆயிரத்து 260 ஆகக் குறைந்தது. இந்த விலை வித்தியாசம் என்பது டன்னுக்கு ரூ.11 ஆயிரமாகும்.

இதேபோல கடந்த 2015ம் ஆண்டு செபம்பரில் சாலை பணிகளுக்கான ‘தார்’ கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.31 ஆயிரத்து 100 என நிர்ணயிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு மார்ச் மாதம், பில் போடுகையில் அது ரூ.23 ஆயிரத்து 146ஆகக் குறைந்தது.

ஒவ்வொரு ஆண்டுக்கும் 4 ஆயிரம் கி.மீட்டருக்கு சாலை அமைத்தலுக்கும் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படும். ஒரு கி.மீட்டர் தொலைவு சாலை அமைக்க 100 டன் ‘தார்’ தேவைப்படும். ஆக, இந்த திட்டம் முழுமைக்கும் 4 லட்சம் டன் ‘தார்’ தேவைப்படும்.

கடந்த 2014-15,  ஆண்டு தார் கொள்முதல் செய்யப்பட்டதில்  உள்ள விலை வேறுபாடு ரூ.444 கோடியாகும், அதேபோல், 2015-16ம் ஆண்டு ‘தார்’ கொள்முதல் செய்யப்பட்டதில் விலை வேறுபாடு ரூ.318 கோடியாகும்.

வழக்கமாக தார் விலை குறையும் போது, அதற்குரிய வேறுபாட்டு விலையை மண்டல பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் இருந்த பெற்று அதை அரசின் கரூவூலத்துக்கு செலுத்த வேண்டும். ஆனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கூட்டு வைத்து பணத்தை செலுத்த வில்லை. இதன் மூலம் அரசுக்கு ரூ. 800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களுடன், சமூக ஆர்வலர் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. அல்லது தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்க கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், பல வழக்குகள் இருந்ததால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios