கமிஷன் உயர்த்தி வழங்க கோரி, திருவள்ளூரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் எரிபொருள் நிரப்பும் முனையங்கள் உள்ளன. சென்னை கொருக்குப்பேட்டையில் இதேபோன்று முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல்-டீசல் பங்குகளுக்கு முகவர்கள், எரிபொருட்களை எடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வரும் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க கோரி, லாரிகளை இயக்காமல் முகவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு அபூர்வசந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி டீசல் லிட்டருக்கு 70 பைசாவும், பெட்ரோலுக்கு 1 ரூபாயும் கமிஷன் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
