Tandav wild elephants made of drought stricken No water no land
பந்தலூர்
நீரும் இல்லை, மரங்களை அழித்ததால் நிலமும் இல்லை என்ற சூழ்நிலையில் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால் காட்டு யானைகள் விவசாய நிலங்களைத் தேடி வருகின்றனர். இதனால், வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் விவசாய நிலங்களை தேடி காட்டு யானைகள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
பந்தலூர் தாலுகா சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் எண்.2 திருவள்ளூவர் நகர், சிங்கோனா, படச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குட்டிகளுடன் கூடிய 10 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை முற்றுகையிட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு சேரங்கோடு, சின்கோனா தேயிலைத் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து முகாமிட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் வனச்சரகர் (பொறுப்பு) மனோகரன், வன காப்பாளர்கள் பிரகாஷ், ராபர்ட் வில்சன் உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் பந்தலூர் அருகே 10–ஆம் எண் ஆதிவாசி காலனி, மேங்கோரேஞ்ச், அத்திக்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன.
இதுகுறித்த புகாரின் பேரில் தேவாலா வனச்சரகர் சரவணன், வனகாப்பாளர் லூயிஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:
“வறட்சியால் வனப்பகுதியில் பசுந்தீவனம் கிடைப்பது இல்லை. மேலும், நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் தாகத்தை தணிக்கவும், உணவு தேவையைப் பூர்த்திச் செய்ய காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
இதனால் எதிர்காலத்தில் வனப்பகுதியில் தடுப்பணைகள் அதிகளவு கட்டி பசுந்தீவனங்களை பெருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
