காவிரியை பாய வைக்க வேண்டியதும் நாம் தான்.. போராட தயாராகு தோழா.. என காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி லண்டனில் வரும் 14ம் தேதி தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து மறியல் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஒருவாரமாக நடந்து வந்தது. நேற்று நடந்த போராட்டம் தமிழகத்தையே அதிரவைத்தது. சென்னையில் அண்ணா சாலையிலிருந்து மெரீனா வரை நடந்த பேரணியால்  ஸ்தம்பித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மெரினா கடற்கரை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது கைது செய்யப்பட்டன.

இந்த நிலையில், லண்டன் வாழ் தமிழர்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ் புத்தாண்டு நாளான சித்திரை 1ம் தேதி ஏப்ரல் 14, போராட்டம் நடத்த அழைப்புவிடுத்துள்ளனர்.

லண்டன் நேரப்படி, அன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். லண்டனிலுள்ள ஈஸ்ட் ஹாம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்தபோராட்டத்தில் “காளையை பாய வச்சது நாம்தான்.. காவிரியை பாய வைக்க வேண்டியதும் நாம் தான்.. போராட தயாராகு தோழா..” என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கொண்டு லண்டன்வாழ் தமிழர்கள் தீவிர பிரச்சாரம் செய்துவருகின்றனர்.