தமிழகத்தில் வறட்சியால் பயிர்கள் கருகுவதை கண்டு விவசாயிகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. அதே வேளையில் தமிழகம் முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பல மாவட்டங்களில் நெல், கரும்பு, மக்காச்சோளம் என பல்வேறு பயிர்கள் தண்ணீரின்றி கருகுகின்றன. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏராளமான விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கண் முன்னே கருகி போவதை கண்டு செய்வதறியாது தவிக்கின்றனர். வறட்சியால் விவசாய பாதிப்பு ஒருபுறம் இருக்க, மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் நாள் கணக்கில் தாமதமாகிறது. அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காத மக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வசதி படைத்தவர்கள், பணம் கொடுத்து கடைகளில் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதிலும் குடிப்பதற்கு, சமையலுக்கு மட்டுமே அதை உபயோகிக்கின்றனர். மற்ற தேவைகளுக்கு என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி வாழ்கின்றனர்.

பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேட்டூர் பவானி சாகர், அமராவதி, பெரியாறு, வைகை என தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளதால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே குடிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.