Asianet News TamilAsianet News Tamil

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்!

உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் மாநில விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது

Tamilnadu tops organ donation health minister received award
Author
First Published Aug 4, 2023, 10:33 AM IST

தேசிய அளவில் உடல் உறுப்பு தானம் செய்வதில் சிறந்து விளங்கும் மாநில விருதை தமிழகம் வென்றுள்ளது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், இதற்கான விருதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவிடம் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 26 மருத்துவ கல்லூரிகள் உடல் உறுப்பு மீட்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை. மாறாக, இந்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மூளை இறப்புகளைப் பதிவு செய்கிறார்கள். உறுப்பு தானம் பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டால், தானமாக கொடுக்கப்படும் உடல் உறுப்புகள் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது.

“தமிழ்நாடு முழுவதும் இப்போது 13 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகள் உள்ளன. 26 உறுப்பு மீட்பு மையங்கள் உள்ளன. மூளை சாவடைபவர்கள் அதிகமான உறுப்பு தானங்கள் செய்வதை பார்க்க முடிகிறது.” என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த மையங்களைத் தவிர, 120 தனியார் மருத்துவமனைகள் அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்சம் மதிப்பிலான மாற்றுச் சிகிச்சைகள் அரசு மற்றும் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முறைப்படுத்தியது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் மூளை சாவுகளை அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனைகளுடன் இணைப்பை ஏற்படுத்த TRANSTAN என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவாவில் இருந்து ராகுல் காந்தி கொண்டு வந்த நாய்க்குட்டி!

தொடர்ந்து பேசிய அவர், “2008 ஆம் ஆண்டில் ஏழு நன்கொடைகள் பெறப்பட்டன. 2013 ஆம் ஆண்டில், மூளைச் சாவு அடைந்த 130 பேரின் குடும்பங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டன. இந்த எண்ணிக்கை 2017 இல் 160 ஆக உயர்ந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால், அடுத்த ஆண்டு முதல் நன்கொடைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2018 இல், 140 நன்கொடைகள் பெறப்பட்டன. இது 2019 ஆம் ஆண்டில் 127 ஆகக் குறைந்தது கொரோனா தொற்றுநோய்களின் போது, 2020 இல் 55 ஆகவும், 2021 இல் 60 ஆகவும் நன்கொடைகள் மேலும் குறைந்துவிட்டன.” என தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில், உறுப்பு மீட்பு மையங்களின் பட்டியலை அரசாங்கம் விரிவுபடுத்தியபோது, 156 நன்கொடைகள் கிடைத்தன. இவற்றில் 51 நன்கொடைகள் அரசு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டவை. மூளை சாவடைவதை அரசு மருத்துவமனைகள் அறிவிக்கவும், குடும்பத்தினர்களுடன் நன்கொடை குறித்து பேசவும் அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிப்பதாக சுகாதாரச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

அதேபோல், தமிழ்நாட்டை தளமாக கொண்ட அரசு சாரா அமைப்பான, மோகன் அறக்கட்டளை, உறுப்பு தானம் துறையில் பணிபுரியும் சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கான விருதையும் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios