Asianet News TamilAsianet News Tamil

டெட் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னையில் போராடி வந்த டெட் ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Tamilnadu TET teachers protest withdraw smp
Author
First Published Oct 5, 2023, 5:08 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ வளாகம்), ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கமும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து, போராடி வரும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை ரூ.10 லட்சம் காப்பீடு, தொகுப்பூதியத்தில் ரூ.2500 உயர்த்தப்பட்டு ரூ.12,500ஆக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

திருப்பதியில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசன நடைமுறை வெளியீடு!

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசியர் சங்கங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த நிலையில், சென்னையில் போராடி வந்த டெட் ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பிரதான கோரிக்கையான அரசாணை எண் 149ஐ ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தங்களது போராட்டத்தை டெட் ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். அதேசமயம், இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios