நீட்க்கு எதிராகவும்  அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை மற்றும்  கோவையில் கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

மருத்துவ படிப்பு கனவை நீட் பறித்துக்கொண்டதால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டதால்  தமிழகம் மற்றும் புதுவையில் கல்லூரி மாணவர்கள் 2 வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட்க்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசின் இந்த போக்கை கண்டித்தும், அனிதாவுக்கு நீதி வேண்டியும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.  அனிதா மரணத்திற்கு பொறுப்பேற்று மத்திய மாநில அரசுகள் பதவி விலக வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதே போல கோயம்பத்தூரில் அரசு கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சேதுபதி அரசு கல்லூரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் அனிதாவுக்கு நீதி கேட்டு ஊர்வலம் நடத்தினர். இதேபோல் கடலூர், நாகை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய மாநில அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால்   தமிழகம் மற்றும் புதுவையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்களை சமாளிக்க முடியாமல்  போலீஸார் திணறி வருகின்றனர்.