சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை -புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும்.

சென்னை - புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க உள்ள நிலையில், 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 6-ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பைச் சந்தித்தன. பின்னர் 11-ஆம் தேதி பெய்த மழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. இதற்கிடையே வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்நிலையில் தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. “காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் மையம்கொண்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை -புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும். மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கபடுகிறது. இங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையைக் கடந்தாலும், மதியம் வரை மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நாளையும் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னை, திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம், வேலூர், நீலகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்ததந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.