Asianet News TamilAsianet News Tamil

தமிழக போலீஸ்க்கு இஸ்ரேல் படைவீரர்கள் மூலம் பயிற்சி; ஒப்பந்தம்கூட போட்டாச்சு - ஜவாஹிருல்லா அதிர்ச்சி தகவல்...

Tamilnadu police Trained by Israeli soldiers - Jawaharullah shocking information
Tamilnadu police Trained by Israeli soldiers - Jawaharullah shocking information
Author
First Published Jun 9, 2018, 9:19 AM IST


ஈரோடு

தமிழக காவலாளர்கள் உள்பட பல்வேறு மாநில காவலாளர்களுக்கு, இஸ்ரேல் படை வீரர்கள்மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம், பவானி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முகமது ரிஸ்வான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.சித்தீக் வரவேற்று பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம், "மத்திய அரசின் செயல்பாடுகளால் தமிழக மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை மீட்டெடுக்கும் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு நீட் தேர்வு. 

இந்த தேர்வில் தோல்வி அடைந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இனிமேல் தற்கொலை சம்பவங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். 

எதிர்காலத்தில் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்லூரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். நீட் தேர்வு காரணமாக இந்த ஆண்டு தமிழக மாணவர்களின் 1450 மருத்துவ இடங்கள் பறிபோய்விட்டன. 

பிளஸ்-2 தேர்வில் தமிழகத்தில் மாணவர்கள் 91.1 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். ஆனால், நீட் தேர்வில் 39.55 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இதில் தமிழகம் 35-வது இடத்தை பிடித்தது. 

தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஆனால், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது. எனவே, நுழைவு தேர்வு அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பசுமை சாலை எனப்படும் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

இதில் 1 ஏக்கர், 2 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. விவசாய நிலத்தை அழித்தால் உணவு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும்.

பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்று கூறி ஒடுக்கப்படுகிறது. தூத்துக்குடியில் நடந்ததே கடைசி துப்பாக்கி சூடு சம்பவமாக இருக்க வேண்டும். இதற்குமேல் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கக்கூடாது. 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலாளர்கள் சீருடை அணியாமல் ஸ்னைபர் துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுள்ளனர். 

தமிழக காவலாளர்கள் உள்பட பல்வேறு மாநில காவலாளர்களுக்கு, பாலஸ்தீனர்களை தாக்கும் இஸ்ரேல் படை வீரர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐதராபாத் காவல் அகாடமி, இஸ்ரேலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மக்களை பாதிக்கும் திட்டத்துக்கு எதிராக போராடும் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் நெருக்கடிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எனவே, ஜனநாயக விரோத ஆட்சி மக்களால் விரட்டியடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios