தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் சேலமும் ஒன்று. சுமார் 100 சதுர கிலோ மீட்டர் கொண்ட சேலம் மாநகராட்சியில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

இதனால் சேலம் மாநகரம், நெரிசல் மாநகரமாகவே காட்சியளித்தது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகரின் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட இந்த மேம்பால பணி திட்டத்திற்காக ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலம் அமைக்கு பணியை ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ரூ.320 கோடி மதிப்பிட்டீலான இந்த திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடப்பதாக கணக்கெடுக்கப்பட்ட ஐந்து ரோடு பகுதியில்தான் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் இந்த மேம்பாலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 39 மாத கால அவகாசத்துடம் மேம்பாலப்பணிகள் நடந்து வருகிறது.

இந்த மேம்பாலம் இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவுக்கு கட்டப்பட்டு வருகிறது. இரண்டு தளங்கள் கொண்ட இந்த மேம்பாலத்தின் முதல் தள கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக சேலம் 5 ரோட்டில் இருந்து நான்கு புறமும், ஈரடுக்கு மேம்பாலத்தை தாங்க வலிமை மிகுந்த 173 தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, குரங்கச்சாவடியில் இருந்து ஐந்து ரோடு வரை 15 தூண்கள், ஐந்து ரோட்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை 32 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ரெசிகாஸ் ரெஸ்டாரண்ட் வரை 38 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டு இறங்கு தளத்தக்கு 10 தூண்கள், ஏ.வி.ஆர். சந்திப்பில் இருந்து ஐந்து ரோடு வரை எட்டு தூண்கள், ஐந்து ரோடு முதல் அழகாபுரம் வரை 31 தூண்கள், அழகாபுரம் முதல் ராமகிருஷ்ணா பிரிவு வரை 39 தூண்கள் என மொத்தம் 173 தூண்கள் அமைக்கப்படுகின்றன.

இரண்டு அடுக்கில் உருவாக்கப்படும் இந்த பாலம் செக்மென்ட் டைப் அதாவது மேம்பாலத்தின் தூண்கள் எழுப்பிய பின்னர், வேறு இடத்தில் கான்கிரீட் பீம்கள் தயாரிக்கப்பட்டு, தூண் மீது பொருத்தப்படும். இந்த முறையில் இணைக்ப்பட்ட் மேம்பாலத்தின் ஓடுதளம் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 6.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு, இரண்டு அடுக்குகளில் அமையும் இந்த இரண்டடுக்கு மேம்பாலம்தான் தமிகத்தின் மிக நீளமான பாலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.