தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம். 

தமிழ்நாட்டில் உள்ள 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு சில தினங்களுக்கு முன் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தமிழக அரசியல் கட்சியினர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுக்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வானர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் - மொத்த பதவியிடங்கள் - 1374

போட்டியின்றி தேர்வானவர்கள் 4
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள் 1370
தேர்தலில் போட்டியிட்டோர் 11196

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தி.மு.க.-வை சேர்ந்த நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாநகராட்சியில் ம. விஜயலட்சுமி 51-வது வார்டிலும், கரூர் மாநகராட்சியின் 22-வது வார்டில் தி.மு.க.வின் ச. பிரேமா, வேலூர் மாநகராட்சியினஅ 7-வது வார்டில் வ. புஷ்பலதா மற்றும் 8-வது வார்டில் மா. சுனில்குமார் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி

மொத்த பதவியிடங்கள் 3843
போட்டியின்றி தேர்வானர்கள் 18

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த 15 பேரும், மற்ற கட்சிகளை சேர்ந்த 3 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வானவர்கள் எண்ணிக்கை 196

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் தி.மு.க.வை சேர்ந்த 101 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேரும், அ.தி.மு.க. வை சேர்ந்த 12 பேர், பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.