வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதவிர வடகிழக்கு பருவமழை காலத்தில் பருவக்காற்று வீசும். மேலும் தொடர்ந்து 21-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும், 22-ம் தேதி அநேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.