tamilnadu govt publish today ranking list

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதி தேர்வு அடிப்படையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. நாளை முதல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் , பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் ‘நீட்’ தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்ட மசோதாவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. அந்த மசோதாவுக்கு அனுமதி பெற்று விடவேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தந்து வந்தது.

ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட கோரியும் உச்சநீதிமன்றத்தில் 6 மாணவர்கள் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு அடிப்படையில்தான மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த, மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்கான தரவரிசை பட்டியலை, மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிடுகிறது. நாளை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 4,567 இடங்கள் உள்ளன. அத்துடன், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் திருப்பி கொடுக்கப்பட்ட, 57 இடங்கள் என, மொத்தம், 4,624 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.