மாதம் மாதம் எந்த தேதியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்குக்கு வரும் தெரியுமா? தமிழக அரசு கூறிய தகவல்
வங்கிகள் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் பணி முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக் கணக்கில் வர வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்
தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுகவை வீழ்த்த திமுகவிற்கு மிகப்பெரிய ஆயூதமாக அமைந்தது தேர்தல் வாக்குறுதி, அதில் முக்கியமாக வாக்குறுதி தான் குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டமாகும். திமுக ஆட்சி அமைத்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என தமிழக மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கான விடை தான் இன்று கிடைத்துள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஒரு கோடி மகளிர்க்கு ஆயிரம் ரூபாய்
அறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் 1 கோடி மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிர்களுக்கான பிரேத்தியேக ஏடிஎம் கார்டையும் வழங்கினார். இதனையடுத்து இந்த மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்த நிலையில், அடுத்த மாதம் எந்த தேதியில் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.
ஒவ்வொரு மாதம் 15ஆம் தேதி
இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் மகளிர்க்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இனி வரக்கூடிய ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.