தமிழக அரசின் விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.50,000 பணமும் தங்கமும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.50,000 பணமும் தங்கமும் வழங்கப்படுகிறது. தமிழக அரசு சார்பாக பெண்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் 'தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம்’. இத்திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்துக்கு நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். ஆணின் வயதுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மறுமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப வருமான வரம்பு எதுவும் கிடையாது. விதவை மறுமண நிதியுதவி திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் கல்வித் தகுதி எதுவும் இல்லை. இவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

இரண்டாவது பிரிவில் பட்டதாரி பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும், 8 கிராம் தங்கமும் கிடைக்கும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே விண்ணப்பம் கிடைக்கும். அதை நிரப்பி, வயது சான்றிதழ், முதல் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ், முதல் கணவரின் இறப்பு சான்றிதழ் போன்றவற்றை இணைத்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
