Tamilnadu : தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை.. விரைவில் தமிழக அரசு அறிவிப்பு..
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இருப்பினும் தொற்றின் பாதிப்பை கருத்தில் கொண்டு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக தொடங்கியுள்ளது. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தொற்று கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700க்கும் கீழ் குறைந்து காணப்படுகிறது. ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் ஒமிக்ரான் பரவுவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நாளை மறுநாளுடன் 15ம் தேதி முடிவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிப்பது மற்றும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.