காமன்வெல்த்தில் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழர் சதீஷ் சிவலிங்கத்திற்கு ரூ.50 லட்சத்தை முதல்வர் பழனிசாமி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.

கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 3வது தங்கப்பதக்கத்தை வென்றார் பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்.

77 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 317 கிலோ எடைதூக்கி தங்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம்.

25 வயது சதீஷ் சிவலிங்கம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக கிளாஸ்கோவில் இதே எடைப்பிரிவில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கிளாஸ்கோவில் இவர் மொத்தம் 328 கிலோ எடைத்தூக்கினார். ஸ்னாட்சில் 149 கிலோவும் கிளீன் அண்ட் ஜெர்க்கில் அப்போது 179 கிலோவும் தூக்கினார்.

ஆனால் இம்முறை ஸ்னாட்சில் 144 கிலோ மட்டுமே தூக்கினார். ஆனால் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 173 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்த தமிழக இளைஞர் சதீஷ் சிவலிங்கத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.