மோடி - ராகுல் ஒப்பீடு: கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ்!

மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Tamilnadu congress committee notice to karti chidambaram seeks explanation for his modi rahul comparision comment smp

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை பெற முனைப்பு காட்டி வரும் கார்த்தி சிதம்பரம், அவ்வப்போது தடாலடியான கருத்துக்களை சொல்லி கட்சியை பல்வேறு சமயங்களில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

அந்த வகையில், அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கூறியிருந்தார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை எனவும் கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக இந்தியா கூட்டணி தீர்மான இயற்றியுள்ள நிலையில், அதற்கு ஆதரவாகவும், மோடிக்கு இணையாக ராகுல் காந்தி இல்லை எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது ஜன.,12இல் தீர்ப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் கே.ஆர்.ராமசாமி ஒரு அணியாகவும், கார்த்தி சிதம்பரம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வரும் நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஆஜராகி கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை அவர் விளக்கம் அளித்தால் அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், கார்த்தி சிதம்பரம் எதையுமே வெளிப்படையாக பேசக் கூடியவர் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். பாஜகவை வெற்றி பெற காங்கிரஸை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பன போன்ற கருத்துகளை கடந்த காலங்களில் பல முறை ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். அதேபோல், அவரது மகனான கார்த்தி சிதம்பரம் இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடியவர். அவரது கருத்துக்களை சரியான புரிதலுடன் எடுத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமே தவிர நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் கூறிவிடவில்லை என்கிறார்கள் கார்த்திக்கு நெருக்கமானவர்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios