அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது ஜன.,12இல் தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வருகிற 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என கூறி அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், மருத்துவ ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ராமர் கோயில் திறப்பு: 30 ஆண்டுகால மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் பெண்!
அதன்படி, செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வருகிற 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், அதற்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.