சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று மாலை நடைப்பெற்ற கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2022ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய பின்பு, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18ம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

நிதிநிலை தாக்கல் செய்த மறுநாள் அதாவது 19ம் தேதி வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக விரைவில் தமிழக அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.