கேரளாவில் தமிழ்நாடு அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து பள்ளத்தில் கவிழும் நிலையில் இருந்த போது ஜேசிபியால் தடுத்து நிறுத்தி 80 உயிர்களை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 80 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழும் நிலையில் பேருந்து நின்றது. 

முன்பக்க சக்கரம் அந்தரத்தில் தொங்கியபடி பேருந்து கவிழும் நிலையில் தத்தளித்து கொண்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஜே.சி.பி., மூலம் மண் அள்ளும் பணியில் கபில் என்ற இளைஞர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

இதைக்கண்ட அவர் தாம் இயக்கி கொண்டிருந்த ஜே.சி.பி., வண்டியை பேருந்து இருந்த பகுதிக்கு கொண்டு சென்று சாதூரியமாக மீட்புப்பணியில் ஈடுபட்டார். துணிச்சலாக ஜே.சி.பி., மூலம் பேருந்து கவிழாமல் தடுத்த கபில், பேருந்தில் தவித்த பயணிகளை பத்திரமாக மீட்டார். பேருந்தில் இறங்கிய பயணிகள் கண்ணீருடன் கபிலுக்கு நன்றி தெரிவித்தனர். கபிலின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.