தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 2வது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் விவசாயிகள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக வேளாண் பட்ஜெட் :
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வேளாண் பட்ஜெட் குறித்து மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளையும் பெற்றுள்ளார். அதேபோல் வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக 250க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் என்றும் இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்திருந்தார்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு :
அதன்படி, வேளாண் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளும், அறிவிப்புகளும் வரும் என்ற நம்பிக்கையுடன் தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர். வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். பாசன வாய்க்கால்களை தூர்வாரி அதிக நிதி ஒதுக்கி அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் . வேளாண் உற்பத்தி பொருட்களை சேமிக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். நெல் கொள்முதல் மையங்களை விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றுக்கு இந்த பட்ஜெட் தீர்வளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
