கனமழையில் நனைய தயாரா? 10 மாவட்டங்கள்; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
Tamil Nadu Rains : தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழக கடலோர பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தற்பொழுது தொடர்ந்து நிலவி வருவதால், நாளை நவம்பர் மூன்றாம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் அதிகனத்த மழை வரை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது அங்கு விடுக்கப்பட்ட அதிக கனத்த மழைக்கான எச்சரிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் திருநெல்வேலியில் உள்ள மலை பாங்கான இடங்களிலும் நவம்பர் மூன்றாம் தேதி மாலை வரை கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் அனேக இடங்களிலும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மதுரை, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை நாளை பரவலாக மாவட்டம் முழுவதும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நவம்பர் நான்காம் தேதியும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். மேலும் இந்த மழையானது நவம்பர் 7ஆம் தேதி வரை தொடரும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெகு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Broadway Bus Stand Change: இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்! எந்த இடம் தெரியுமா? வெளியான தகவல்!