- Home
- Politics
- விஜய்க்கு பின்னால் சகுனி ஆட்டம்..? ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல்..! அதிர வைக்கும் மச்சான் ஜோஸ் மார்ட்டின்..!
விஜய்க்கு பின்னால் சகுனி ஆட்டம்..? ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல்..! அதிர வைக்கும் மச்சான் ஜோஸ் மார்ட்டின்..!
திமுகவின் ஒரு முக்கிய புள்ளியால் உங்களையும், உங்கள் கட்சியையும் வேரோடு அழிப்பதற்காக அனுப்பப்பட்ட ‘Sleeper Cell’ தான் இந்த ஆதவ் அர்ஜூனா.

ஆதவ் அர்ஜுனாவின் அஜெண்டா
விஜய்யின் வலதுகரமாகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனாவுக்கும், அவரது மைத்துனரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கும் இடையே வெடித்துள்ள நேரடி மோதல், 'தவெக' எனும் கோட்டைக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா மீது, அவரது சொந்த மைத்துனரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிரடி ரகம்.
விஜய்யை தடம் புரளச் செய்யவும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் ஆதவ் அர்ஜுனா ஒரு 'அஜெண்டா' வைத்துச் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.
சுயநலமும், அதிகார பசியும்
இதுகுறித்து அவரது எக்ஸ்தளப்பதிவில், ''அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது முதல், உங்கள் நலன் விரும்பியாக நான் ஒரு உண்மையை உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தவெக-வுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவது ஆதவ் அர்ஜூனாதான். இதற்கு பின்னால் அவருடைய சுயநலமும், அதிகார பசியும் மட்டுமே இருக்கிறது.
திமுகவின் ஒரு முக்கிய புள்ளியால் உங்களையும், உங்கள் கட்சியையும் வேரோடு அழிப்பதற்காக அனுப்பப்பட்ட ‘Sleeper Cell’ தான் இந்த ஆதவ் அர்ஜூனா. தவெக-விற்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவைத் திசைமாற்றி, அதை எதிரணிக்குச் சாதகமாக்கும் சதிவேலைகளை அவர் மிகக் கச்சிதமாக செய்து வருகிறார்.
குடும்பத்தையும், அரசியலையும் சிதைப்பார்
அதன் ஒரு பகுதிதான் கரூர் துயர சம்பவம். 41 அப்பாவி உயிர்கள் பறிபோன அந்த கோர சம்பவத்திற்கு பின்னணியில் ‘சகுனியாக’ இருந்து காய் நகர்த்தியவர் இவர் தான். சிபிஐ விசாரணையில் இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. அன்று செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பதை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறேன்.
செல்லும் இடமெல்லாம் தன்னைத் தானே தலைவனாக கட்டமைக்க முயல்வது இவரது வழக்கம். இதையுணர்ந்தே திருமாவளவன் அவர்கள் இவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தினார். என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல, உங்கள் குடும்பத்தையும், அரசியலையும் சிதைக்க அவர் தயங்கமாட்டார்.
பாதியிலேயே முடங்கிப்போகும் விஜய்
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கும் உங்கள் பயணத்திற்கு, நான் ஒரு நலம் விரும்பியாகச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்... உங்கள் பாதை தெளிவாக இருக்கலாம். ஆனால் பயணிக்க வேண்டிய தடம் வழுக்கலாக இருக்கிறது. கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால், உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் அபாயம் உண்டு.
காலத்தே எடுக்கும் துணிச்சலான முடிவே கழகத்தின் எதிர்காலத்தை காக்கும். விழிப்புடன் இருங்கள், வெற்றிக்கான பாதையை சீர் செய்யுங்கள்'' எனத் தெரித்துள்ளார்.
மச்சான்களுக்கு இடையிலான இந்தப் போர், தவெகவில் பிரளயத்தை கிளப்பி இருக்கிறது.
