Asianet News TamilAsianet News Tamil

சிகிச்சை அளிக்க மறுத்த கேரள மருத்துவமனைகள் - 7 மணி நேரம் போராடி ஆம்புலன்சிலேயே உயிரிழந்த தமிழர்!!!

tamil youth died in ambulance
tamil youth died in ambulance
Author
First Published Aug 7, 2017, 4:18 PM IST


விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய தமிழக இளைஞருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால், 7 மணி நேரம்ஆம்புலென்சில் அலைக்கழிக்கப்பட்டு இந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லையைச் சேர்ந்தவர் முருகன். கேரளாவில் கூலிவேலை பார்த்து வருகிறார்.கொல்லம் மாவட்டம், சத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் முருகன் சாலை விபத்தில் சிக்கினார். இதில் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் இருப்பதைப் பார்த்த சிலர்ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். 

ஆம்புலன்ஸ் மூலம் 4 மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றும்,பல்வேறு காரணங்களைக் கூறி சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டுள்ளது. இதனால், 7 மணிநேரம்ஆம்புலன்சிலேயே முருகன் குற்றுயிரும், குலை உயிருமாக உயிருக்கு போராடியுள்ளார். 

இறுதியில், உயிர்காக்கும் சிகிச்சை ஏதும் அளிக்கப்படாமல் நேற்று காலை காலை 6 மணிக்கு ஆம்புலன்சிலேயே முருகன் உயிரிழந்தார். இரவு 11 மணிக்கு விபத்தில் சிக்கியவர் 7 மணி நேரம் உயிருக்கு போராடி உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீசிடம் அளித்த புகாரையடுத்து,கொல்லம் நகர போலீசார் ஒரு அரசு                       மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இது குறித்து கொல்லம் நகர போலீஸ் ஆணையர் அஜிதா பேகம் கூறியதாவது- 

சத்தனூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ஏற்பட்ட சாலை விபத்தில் முருகன் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, இவரை ஆம்புலன்சு மூலம், சிகிச்சைக்காக கொல்லம்மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். 

முதலில் கொல்லம் அருகே கொட்டியத்தில் உள்ள கே.ஐ.எம்.எஸ். என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிர் காக்கும் கருவிகள் இல்லை என்றுகூறி ஆம்புலன்சை மருத்துமவனை நிர்வாகம் கொல்லத்தில் உள்ள   மெடிசிட்டி என்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவருடன் யாரும் வரவில்லை எனக் கூறி சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 

அதன்பின், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், எஸ்.யு.டி. மருத்துவமனைக்கும் கொண்டு சென்றும் முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் 7 மணிநேரம் சிகிச்சை அளிக்கப்படாமல்  ஆம்புலன்சில் அலைக்கழிக்கப்பட்டு முருகன் இறந்துள்ளார்.

இதையடுத்து, ஆம்புலன்சு டிரைவர்கள், ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனைகள் மீது கவனக்குறைவாக நடந்து உயிரிழக்க காரணமாக இருத்தல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிக்கையாள அளிக்க போலீஸ் ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஆம்புலன்சு ஊழியர்கள் ராஜேஷ், ராகுல் தனியார் செய்தி சேனலுக்குஅளித்த பேட்டியில் கூறுகையில், “ அடையாளம் தெரியாதவர் என்று கூறி 4 மருத்துவமனைகளும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. ஆம்புலன்சில் ஏறக்குறைய 7 மணிநேரம் சிகிச்சை அளிக்காமல் முருகனை வைத்து இருந்தோம். 

பல தனியார், அரசு மருத்துவமனை கல்லூரிகளுக்கு கொண்டு சென்றும், அங்கு வெண்டிலேட்டர் வசதி இல்லை எனத் தெரிவித்துவிட்டனர். இறுதியாக அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் இறந்துவிட்டார்.

ஆம்புலன்சில் வென்டிலேட்டர் வசதி இருந்தும், மெடிசிட்டிமருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தவரை பரிசோதிக்க நேரில் வர மறுத்துவிட்டனர்’’ எனத் தெரிவித்தனர்.ஆனால், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகங்கள் மறுத்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios