மாவட்ட வாரியாக வாக்காளர்கள் நீக்கம் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட நிலையில், சென்னை மாவட்டத்தில் மட்டும் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தோர், இரட்டை வாக்குகள் ஆகிய காரணங்களுக்காக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

மாவட்ட வாரியாக வாக்காளர்கள் நீக்கம் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட நிலையில், சென்னை மாவட்டத்தில் மட்டும் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்போது 25,79,676 வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் இறந்த வாக்காளர்கள் 1,56,555, முகவரியில் இல்லாதவர்கள் 27,328, குடி பெயர்ந்தோர் 12,22,164, இரட்டை வாக்கு 18,772 என மொத்தம் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் எத்தனை லட்சம் வாக்காளர்கள்?

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் மூன்றில் ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் திருவல்லிக்கேணி தொகுதியும் ஸ்டார் தொகுதிகளாக உள்ளன. இதில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு பிறகு முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் 1.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். துணை முதல்வர் தொகுதியில் 1.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

மதுரை, கோவை, திருச்சியில் பல லட்சம் பேர் நீக்கம்

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு மாவட்டம்வாரியாக முக்கிய நகரங்களை எடுத்துக்கொண்டால் மதுரையில் 3,80,404 வாக்காளர்கள், கோவையில் 6,50,590 வாக்காளர்கள், திருச்சி 3,31,787, திருநெல்வேலி 2,16,966, திருப்பூர் 5,63,785, திருச்சி 3,31,787, சேலம் 3,62,429, தென்காசி 1,45,157 வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.