கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் பயணித்த நரிக்குறவர் குடும்பத்தினரை பாதிவழியிலியே இறக்கிவிட்ட வீடியோ வைரலானதை அடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் விற்கும் பெண்மணி ஒருவர் பேருந்தில் ஏறிய போது, உன் மீது மீன் நாற்றம் அடிக்கிறது என்று அவரை பேருந்தில் ஏற்ற மறுத்து கீழே இறக்கி விட்டு சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீன் விற்கும் தொழில் செய்யும் செல்வமேரி என்ற அந்த பெண்மணி , ”உங்கள் மேல் நான் புகார் கொடுப்பேன் . இப்படி தான் என்னை முன்னாடி இரண்டு முறை இறக்கி விட்டாங்க” என்று பேருந்து நிலையத்தில் கதறி அழுதவாறு , தனது ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது. 

பலரும் அந்த வீடியோவை டேக் செய்து அந்த பெண்மணிக்காக ஆதரவு குரல் கொடுத்தனர். தீண்டாமை பார்ப்பது, ஏற்ற தாழ்வு பேணுவது கொடுஞ்செயலுக்கு நிகரானது .இக்காலத்திலும் இப்படி வயதான பெண்மணியை இரக்கமில்லாமல் பேருந்தில் இருந்து எப்படி இறக்கிவிடலாம் என்று கேள்விகளும் எழுப்பப்பட்டது. இதுக்குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசவாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டம் கொண்டுவந்து திறம்பட செயல்படுத்தபட்டு வருகிறது. ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் நடத்துனரின் செயல் கண்டித்தக்கது என்றும் பதிவிட்டார். இதனையடுத்து, மீனவ பெண்ணை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர், பேருந்து நேரக்காப்பாளர் ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது, நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் பயணித்த நரிக்குறவர் குடும்பத்தினரை பாதிவழியிலியே இறக்கிவிட்ட வீடியோ வைரலானதை அடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நாள்தோறும், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயணிப்பது வழக்கம். அதன்படி, நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட பேருந்தில் சிறுவன் உட்பட 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் பயணித்துள்ளனர். அப்போது, பேருந்தின் நடத்துனர் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

YouTube video player

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் வெளியிட்ட அறிவிப்பில் ''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் திருவட்டார் கிளை பேருந்து எண் TN74 N1802, டிசம்பர் 9 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர் நெல்சன் மற்றும் நடத்துனர் ஜெயதாஸ் பணியில் உள்ளனர். இந்த பேருந்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வயதான ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஏறியுள்ளனர். பேருந்து வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது மேற்படி பயணிகள் மூவரையும் பேருந்திலிருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இறங்கிவிட்டதாக தெரிகிறது. இந்நிகழ்வை அருகில் உள்ள பேருந்து நிலைய காப்பாளர்களிடம் தெரிவிக்காமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளனர்.

பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் இதனை வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்த பின்னரே இந்நிகழ்வு நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. எனவே பொறுப்பற்ற முறையில் பணி செய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.