Tamil Nadu state is taking copyright scandal
தஞ்சாவூர்
தமிழ்நாடு அரசு கருத்துரிமைப் பறிப்பில் எதேச்சதிகாரத்துடன் நடந்து கொள்கிறது என்று கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்த் தேசியப் பேரியக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,
அதில், “கருத்துப்படச் சிந்தனையாளர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவலாளர்கள் கைது செய்துள்ளனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டிக் கடன் தொல்லை தாங்காமல், கணவன், மனைவி, அவர்களது இரு குழந்தைகள் தீ வைத்து எரித்துக் கொண்டு இறந்த செய்தி தொடர்பாகக் கருத்துப்படம் போட்டதற்காக, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போதுள்ள தமிழ்நாடு அரசு, கருத்துரிமைப் பறிப்பில் மிகவும் கடுமையாக எதேச்சதிகாரத்துடன் நடந்து கொள்கிறது.
இதேபோல, கூடங்குளம் வழக்குகளில் உதயகுமார் உள்ளிட்டோருக்காகச் சட்டப் பணி ஆற்றி வரும் வழக்குரைஞர் செம்மணி என்ற இராசரத்தினத்தை நவம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு காவல்துறையினர் கைது செய்து, அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் கருத்துரிமைப் பறிப்பு, ஒடுக்குமுறையையும், காவல் துறையினரின் வன்முறைகளையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வழக்குரைஞர் செம்மணியைத் தாக்கிய காவல்துறையினரை உடனடியாக இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும்.
கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை உடனடியாகக் கைவிட்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
