தமிழக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சிறை கைதிகள் 96.14% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 363 கைதிகளில் 349 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், பல சிறைகள் 100% தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. இந்த வெற்றி, சிறைத்துறையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு கிடைத்த பலனாக பார்க்கப்படுகிறது.
தமிழக சிறை கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அசத்தல் சாதனை... 96.14% பேர் தேர்ச்சி!
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் சிறை கைதிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய 363 கைதிகளில் 349 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மொத்த தேர்ச்சி விகிதம் 96.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை வெளியிட்ட தகவலின்படி, தேர்வு எழுதியவர்களில் 21 பேர் பெண்கள் கைதிகள். இவர்களில் 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கைதிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு சிறைத்துறை மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலனை கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை, கடலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை மற்றும் சென்னை மத்திய சிறை-II ஆகிய மத்திய சிறைகளிலும், சென்னை, வேலூர், மதுரை, கோயம்புத்தூர் பெண்கள் சிறைகளிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும் 100% தேர்ச்சி பதிவாகியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் அதிகமானோர் பங்கேற்பு
அதிகமான கைதிகள் தேர்வு எழுதியது திருச்சி மத்திய சிறையில். அங்கு தேர்வு எழுதிய 86 பேரில் 85 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய 53 பேரும் முழுமையாக தேர்ச்சி பெற்றனர். சென்னை மத்திய சிறை-Iல் தேர்வு எழுதிய 42 பேரில் 40 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தனிப்பட்ட மதிப்பெண் பட்டியலிலும் கைதிகள் சாதனை படைத்துள்ளனர். பாளையங்கோட்டை மத்திய சிறையைச் சேர்ந்த பி.விக்னேஷ்வரன் 500க்கு 445 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். அதே சிறையைச் சேர்ந்த ஐ.அரோக்கிய ஜீன் 444 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றார். சென்னை பெண்கள் சிறையைச் சேர்ந்த பி.ஜெயலட்சுமி 417 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை கைப்பற்றினார்.
சிறைகளுக்குள்ளேயே தேர்வு மையங்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. மேலும், அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் சிறைகளிலும் தகுதியான ஆசிரியர்களுடன் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது. “சிறை என்பது தண்டனை பெறும் இடம் மட்டுமல்ல; வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் கூட” என்பதை இந்த தேர்ச்சி முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளன.


