கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு இந்த வழக்கை விரைவாக விசாரித்து வருவதாக கூறியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கரூர் விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
சிபிஐக்கு மாற்ற வேண்டும்
இந்நிலையில், கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரனை மீது நம்பிக்கை இல்லை என்றும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதேபோல் உயிரிழந்தவர் ஒருவரின் சகோதரியும், கரூர் கூட்ட நெரிசலுக்கு போலீசின் அலட்சியமே காரணம். ஆகையால் இந்த வழக்கை மாநில காவல்துறையினர் விசாரிக்க கூடாது என்றார்.
தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி
மேலும் ஒரே இரவில் அனைத்தும் உடல்களுக்கும் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது எப்படி? கூட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அப்போது தமிழக அரசு தரப்பில், 'காவல்துறை மீது என்ன தவறு உள்ளது? என்று கூறுங்கள். கரூர் விவகாரத்தில் அரசு மிக விரைவாக செயல்பட்டுள்ளது.
சிபிஐக்கு மாற்ற கூடாது
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் முன்னாள் நீதிபதியின் ஒரு நபர் விசாரணை ஆணையமும் விசாரித்து வருகிறது. ஒரு வழக்கில் விசாரணை தொய்வாக நடந்தால் தான் சிபிஐக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடந்து வரும் நிலையில், பாதிக்கப்படவர்கள் மனுவில் கூறினார்கள் என்ற அடிப்படையில் சிபிஐக்கு மாற்றி விட முடியாது.
விசாரணை ஒத்திவைப்பு
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது. இப்படி பல்வேறு வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ குறைந்த அளவிலான சோர்ஸ் தான்'' என்று வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்த உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
