பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களை இணைக்கும் மினி பஸ் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 1 கோடி மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் பயண வசதி கிடைப்பதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tamil Nadu low fare mini bus project : பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களையும், நகர்ப்புறங்களையும் இணைக்கிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள கிராமங்களுக்கு மினி பஸ் சேவை விரிவாக்கப்பட்டு, 25 கி.மீ. வரையிலான வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு அருகிலுள்ள ஊர்களுக்கு செல்ல எளிமையான மற்றும் மலிவான போக்குவரத்து வசதியை வழங்குகிறது. அந்த வகையில் மின் பேருந்தில் கட்டணமும் தனியார் பேருந்தோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
முதல் 4 கி.மீ: 4 ரூபாயும், 4 கி.மீ முதல் 6 கி.மீ வரை: 5 ரூபாயும், 6 கி.மீ முதல் 8 கி.மீ வரை: 6 ,ரூபாயும், 8 கி.மீ முதல் 10 கி.மீ வரை: 7 ரூபாயும், 10 கி.மீ முதல் 12 கி.மீ வரை: 8 ரூபாயும், 12 கி.மீ முதல் 14 கி.மீ வரை: 9 ரூபாயும், 14 கி.மீ முதல் 20 கி.மீ வரை: 10 ரூபாயும், 20 கி.மீ முதல் 22 கி.மீ வரை: 11 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறைவான கட்டணத்தில் மினி பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பயன் அடைந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மினி பேருந்து திட்டம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்கள். பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்கத்தக்க வகையில் மினி பஸ் திட்டம் 1997ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. மினி பஸ் திட்டம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 22.7.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் தொழில் சார்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில் புதிய விரிவான மினி பஸ் திட்டம் 2024 குறித்து 23.1.2025 அன்று அறிவிக்கப்பட்டது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் மறுபடியும் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, 28.4.2025 அன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 25 கி.மீ. தூரத்திற்கு மினி பஸ் இயக்கப்படும் என்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொதுமக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டது. இதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மினி பேருந்தை வரவேற்று கொண்டாடும் மக்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை 16.6.2025 அன்று தஞ்சாவூரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். இதுவரை, பேருந்துகளை தங்கள் கிராமத்தில் காணாத பொதுமக்கள் எல்லாம் கண்டு மகிழ்ந்து பரவசம் அடையும் வகையில் மினி பேருந்துகள் கிராமப்புறங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்த மினி பஸ் தங்களுடைய கிராமத்திற்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் தரையில் விழுந்து தலைவணங்கி பேருந்தை வரவேற்றார். வேறு சிலர் பேருந்து வந்த வழித்தடத்தில் கற்பூரம் ஏற்றி மகிழ்ந்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
திருத்தணியிலிருந்து தும்பிக்குளத்திற்குப் புதிதாக இயக்கப்பட்ட மினி பஸ்ஸில் பயணம் செய்த ஒரு பெண், "நான் தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாயக் கூலி தொழிலாளியான நான், நாள்தோறும் வேலைக்குச் செல்லும்போது பஸ் வசதி இல்லாததால், நடந்தே வேலைக்குச் சென்று அவதிப்பட்டு வந்தேன். தற்போது மினி பஸ் சேவை தொடங்கியிருப்பதால், இதில், பாதுகாப்பாக வேலைக்குச் சென்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் கிராமத்திற்கு மினி பஸ் திட்டத்தைச் செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மினி பேருந்தால் ஒரு கோடி மக்கள் பயன்
பவானி என்னும் மாணவி தெரிவிக்கையில் "திருத்தணியில் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கிறேன். நான் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால், நாள்தோறும் பள்ளிக்குச் செல்வதற்குச் சிரமம் ஏற்பட்டது. தற்போது எங்கள் ஊருக்கு மினி பஸ் வருவதால், நான் பள்ளி செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த மினி பஸ் திட்டத்தால், இவர்களைப் போல ஏறத்தாழ 1 கோடி மக்கள் மினி பஸ்ஸில் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
