சட்டசபை இன்று தொடங்கியதும் ஒத்திவைக்கப்படுகிறது.! என்ன காரணம்.?
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் வெளியேறினார். இதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுகவினர் யார் அந்த சார் என கோஷமிட்டு வெளியேற்றப்பட்டனர். இன்று இரண்டாம் நாள் சட்டப்பேரவையில் நடைபெறப்போவது என்ன.?
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்ட சபையின் இந்த ஆண்டில் முதல் கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு தமிழக அரசு சார்பாக உரிய மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்குள் சென்ற ஆளுநர் தனது இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லையென கூறி ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல." என கூறியிருந்தார்,
ஆளுநர்- முதல்வர் மோதல்
இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். அதில் தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. என தெரிவித்தார். மேலும் "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! என குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அதிமுக சார்பாக தமிழக சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தப்பட்டது. யார் அந்த சார் என பேனரோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவை இன்று ஒத்திவைப்பு
இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் கூட்டமானது நடைபெறவுள்ளது. இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். தமிழ்மொழி ராஜதத்தன், மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை நடவடிக்கைகள் இன்றைய தினம் ஒத்திவைக்கப்படவுள்ளது.