Tamil Nadu is the best medicine in the state to come and treat the state - Minister is proud of ...

தூத்துக்குடி

மருத்துவத் துறையில் தமிழகம் தலைச் சிறந்து விளங்குகிறது என்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பொதுநல மருத்துவமனையில் 10 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. இங்கு டயாலிசிஸ் பிரிவில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.

இதற்கு அனுமதி பெற்றுத் தந்த செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு பாராட்டு விழா, மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம் தலைமை வகித்தார். பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் வரவேற்றுப் பேசினார்.

முதலில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நினைவு பரிசாக வெள்ளி வாளினை நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் ஆகியோர் வழங்கினர்.

பின்னர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது: “தமிழகத்தில் 208 அரசு மருத்துவமனைகளும், 643 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.1525 கோடி செலவில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் தமிழகம் தலைச் சிறந்து விளங்குகிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது: “நாடார் சமுதாய மக்கள் கடுமையான உழைப்பாளர்கள். அவர்கள் மற்றவர்களின் உழைப்பில் வாழ விரும்பாதவர்கள். அவர்கள் கல்வி, மருத்துவம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தலைசிறந்து விளங்குகின்றனர்.

ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் இந்த மருத்துவமனை செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.