தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கப் போகிறது என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். பருவமழை இல்லாத பகுதிகளிலும், அடுத்த 10 நாட்களில் இந்த மழை இருக்கும். மேலும் கடந்த வாரத்தில் அதிகமான மழை மேற்கு தமிழகத்திலேயே பெய்துவிட்டது. 

இப்போது சிறிய இடைவெளிக்குப்பின், கிழக்குப்பகுதியில் மழை தனது பணியைச் செய்ய இருக்கிறது என பிரதீப் ஜான் கூறியுள்ளார். அடுத்து வரும் சில நாட்களில் தமிழகம் மற்றும் சென்னையில் கனமழையை எதிர்பார்க்கலாம். ஆனால் வெள்ளம் வரும் அளவிற்கு மழை பெய்யாது என்று தெரிவித்துள்ளார். வடசென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். 

கேரளாவைப் பொறுத்தவரை மழை தற்போது அங்கு சற்று ஓய்ந்துள்ளது. சில நேரங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால் கனமழை இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூரிலும் அடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு கனமழை இருக்காது என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.