Asianet News TamilAsianet News Tamil

திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலங்களும் வியந்து பார்க்கின்றன - முதல்வர் பெருமிதம்

நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் வியந்து பார்க்கும் வகையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu has shaped India s future Dravidian model of governance hailed says MK Stalin
Author
First Published Sep 27, 2022, 11:47 AM IST

சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார், விழாவில் அவர் பேசியதாவது, ”இந்தியாவின் வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் தெற்கு வழிகாட்டுகிறது என்று நாங்கள் சொல்வதை, மொழிப்பற்றால் - இன உணர்வால் சொல்வதாக யாரும் நினைக்கக் கூடாது. வரலாறு சொல்லும் பாடம் என்பதும் அதுதான்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட சமூகமாக கீழடியிலும் - ஆதிச்சநல்லூரிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இந்த வரலாறு சொல்லத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பதே தெற்கில் இருந்துதான் முதன்முதலில் தொடங்கியது. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாகி அடிமைப்படுத்துதல் உருவானபோதே அதற்கு எதிரான விடுதலை முழக்கமிட்ட மண், இந்தத் தென்னக மண்!

அதிமுக மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய ஓபிஎஸ்..! புதிய பொறுப்பு வழங்கி எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி 

இந்தியர்களுக்கு ஓரளவு நிர்வாக சுதந்திரம் தரலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, இரட்டையாட்சி முறை 1920-ஆம் ஆண்டு உருவானது. அப்போது அந்த இரட்டையாட்சி முறையை முறைப்படி நடத்தி மக்களாட்சியின் மாண்பைக் காத்த அரசு அன்றைய சென்னை மாகாண நீதிக்கட்சியினுடைய அரசு! அன்றைக்கு சென்னை ராஜதானி சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் போல இருக்கும் என்று சொல்லி அயல்நாடுகளில் இருந்து வரக்கூடிய பார்வையாளர்கள் நம்முடைய சட்டமன்றத்தை வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வகுப்பின் அளவுக்கு தகுந்த இடஒதுக்கீடு எனும் சமூகநீதி உரிமையை வழங்கியது தமிழ்நாடு.

பெண்களுக்கு வாக்குரிமை என்பது 1921-ஆம் ஆண்டே சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. 

சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என முதன்முதலாக சட்டம் போட்டது தமிழ்நாடு.

இந்தியாவின் மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முதலில் சொன்னது தமிழ்நாடு.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை நிலைநாட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யக் காரணமானது தமிழ்நாடு.

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்.. விசாரணை வளையத்தில் 2 பேர்.!

“சென்னையில் நடந்த போராட்டங்கள் காரணமாகத்தான் இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது” என்று பிரதமர் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்கள். இதன் மூலமாகத்தான் இந்தியாவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இருந்த தடைகள் மொத்தமாக நீக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் ஆணையத்தால் வழங்கப்பட வேண்டிய 27 விழுக்காடு இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து போராடியது திராவிட இயக்கம். வி.பி.சிங் அவர்களைப் பிரதமராக ஆதரித்து, அதனைச் செயல்படுத்திக் கொடுத்ததன் மூலமாகத்தான், இந்தியாவில் இருக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களும் தடையின்றி நிர்வாக அதிகாரம் பெற வழிவகை செய்தது தமிழ்நாடு.

மாநில சுயாட்சிக்காக 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதன் மூலமாக மாநில சுயாட்சி நிலைக்கவும் - இந்தியாவில் கூட்டாட்சி செழிக்கவும் அடித்தளமிட்டவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

ஆகஸ்ட் 15-ஆம் நாள், விடுதலை நாளன்று, மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்தவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

இன்றைய நாள் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் வியந்து பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம்.

இப்படி கடந்த பல நூறு ஆண்டுகளாக இந்தியாவின் வளத்திற்கும் - நலத்திற்கும் - செழிப்புக்கும் - செம்மைக்கும் வழிகாட்டி வருவது தமிழ்நாடு என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

தமிழக மக்களிடையே பயமும் பதற்றமும்.. அமைதியை சீர்குலைக்க நினைக்கும் எவனையும் சும்மா விடாதீங்க.. டிடிவி. ஆவேசம்

அத்தகைய பெருமைமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் உங்களையெல்லாம் நான் சந்திக்க வந்திருக்கிறேன்.

அனைத்துத் துறை வளர்ச்சி - 

அனைவருக்குமான வளர்ச்சி - 

அனைத்து மாவட்ட வளர்ச்சி - 

அனைத்துச் சமூக வளர்ச்சி என்பதை எனது ஆட்சியின் விரிந்த எல்லையாக  அறிவித்து இருக்கிறேன்.

சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று - மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் சேர்க்கையாக திராவிட மாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம், கல்வியை, வேலைவாய்ப்பை, அரசியல் அதிகாரத்தை, நிர்வாகப் பொறுப்புகளை பெற முடியவில்லை. இவற்றைப் பெறுவதற்கான வாசல்தான் சமூகநீதிக் கருத்தியல்! நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் அனைத்து சமூக மக்களும் கல்வி, வேலைவாய்ப்புகளின் இருந்த நிலைமையையும், இன்று அடைந்துள்ள பயன்களையும் பாருங்கள். இதுதான் திராவிடச் சிந்தனைகளின் வெற்றியாக அமைந்திருக்கிறது!

ஒருகாலம் இருந்தது, 'வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார். ஆனால் இன்றைக்கு வடக்கை விட, தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது. இதுதான் திராவிடச் சிந்தனைகளின் வெற்றியாக அமைந்திருக்கிறது!

இன்றைக்கு மகளிருக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயண வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். வேலைக்குப் போகும் பெண்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்திருக்கிறோம் என்பது ஒருபக்கம். இந்த வசதி காரணமாக ஏராளமான பெண்கள், வீட்டை விட்டு வெளியில் வந்து, சமூகத்தின் பல்வேறு பணிகளை முன்னின்று செய்வதற்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதன்மூலமாக அவர்களது குடும்பம் மட்டுமல்ல, இந்தச் சமூகமும் வளர்ச்சி பெறுகிறது. இதுதான் திராவிட மாடல் சிந்தனையினுடைய வெற்றி!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்  தமிழ்நாடு இருக்கிறது.

நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக் குறியீடுகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. உயர்கல்வியில் சேர்வோர் விகிதம் 51.8 விழுக்காடாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை என்பது 6.8 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் 3.63 விழுக்காடுதான்.

இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அதிகம். பணவீக்கம் என்பது இந்திய அளவில் 6.71 விழுக்காடு. ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் என்பது 4.78 விழுக்காடுதான். பட்டினிச் சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை 4 விழுக்காடு மட்டுமே.

இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடிய தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் இருக்கிறது. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் இருக்கிறது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. - இவை அனைத்தும் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி!

இந்த அடித்தளத்தில்தான் திராவிட மாடல் ஆட்சியானது நடந்து வருகிறது.

ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல். மக்களின் ஏற்றத்தை பார்ப்பது திராவிட மாடல்! 

இறக்குமதியை மட்டும் கணக்கிடுவது வேறு மாடல். இரக்க சிந்தனையோடு திட்டமிடுவது திராவிட மாடல்!

சில மாநிலங்கள் வளர்ந்தால் போதும் என்று நினைப்பது வேறு மாடல். அனைத்து மாவட்டங்களையும் வளர்க்க நினைப்பது திராவிட மாடல்!

ஒற்றைச் சிந்தனை கொண்டது வேறு மாடல். பரந்த ஒருமைச் சிந்தனை கொண்டது திராவிட மாடல்!

ஒற்றுமையில் வேற்றுமை உருவாக்குவது வேறு மாடல். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது திராவிட மாடல்!

அதனால்தான் அனைத்து மாநிலங்களிலும் திராவிட மாடல் சிந்தனை பரவ வேண்டும் என்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios