Tamil Nadu government plan to reopen the task mac

தேசியநெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தேசிய நெடுஞ்சாலைகளில் 220 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் மதுபானக் கடைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அண்மையில் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 3200 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கப்பெற்று வந்த வருவாயில் 25 சதவீதம் இழப்பு ஏற்பட்டது. 

இந்தச் சூழலில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை நகராட்சி சாலையாக மாற்றுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்தச் சூழலில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, சாலையை மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.