தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிடுங்கள்.! தமிழ்நாடு அரசு பரபரப்பு கடிதம்
ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி தண்ணீர் மற்றும், ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர்
மேகதாது அணை பிரச்சனை காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடாகவிற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீரை வழங்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும்.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா, மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்
ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி தண்ணீர் மற்றும், ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரையும் வழங்க உத்தரவிட வேண்டும், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே போதுமானதாக இருப்பதால் அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் கருத்து - தமிழ்நாடு அரசின் கடிதம் ஆகியவை இரு மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்