Tamil Nadu government leased mountain to private quarry people condemned protest

கிரிஷ்ணகிரி

பஸ்தலபள்ளியில் உள்ள மலையின் ஒரு பகுதியை தனியார் கல்குவாரிக்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டதைக் கண்டித்து குவாரியை முற்றுகையிட்டு் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பஸ்தலபள்ளி கிராமத்தில் திம்மராய சாமி என்ற மலைக் கோயில் ஒன்று உள்ளது. இங்கு வருடந்தோறும் தேர் திருவிழா மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

இந்த கோயிலுக்கு சூளகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும், பெங்களூரு, மாலூர், சந்தாபுரம் போன்ற கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து திம்மராய சாமியை வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில், கோயில் அருகே மலையின் ஒரு பகுதியை, ஒரு தனியார் கல்குவாரிக்கு தமிழக அரசு சார்பில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பணி தொடங்கும் வகையில் பாறைகளுக்கு வெடிவைத்து வருகின்றனர். 

இதுகுறித்து அறிந்த பஸ்தலபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நேற்று அங்கு சென்று, "மலையின் ஒரு பகுதியை தனியார் குவாரிக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும், பாறைகளை தகர்க்க வெடி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்" குவாரியை முற்றுகையிட்டு் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் காவலாளர்கள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும், இந்தப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், சூளகிரி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் எச்சரித்துவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.