Tamil Nadu government issues GO to permanently close down Sterlite
“தூத்துக்குடியில் இன்னும் இயல்பு நிலை முழுதாகத் திரும்பவில்லை. கடைகள் திறப்பதும், பேருந்துகள் ஓடுவதும்தான் இயல்பு வாழ்க்கை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்புகிறது. ஆனால் மக்கள் மனதிலிருந்து அச்சமும் கோபமும் இன்னும் முழுதாக அகலாத நிலையில், பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது சேதமடைந்த பகுதிகளையும் துணை முதல்வர் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், அரசு தரப்பிலிருந்து யாரும் வராதது தூத்துக்குடி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று 144தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உள்ளூர் அமைச்சர் வந்தால் போதாது காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் காயமடைந்தவர்களை சந்தித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று முதல்வரும் துணைமுதல்வரும் நடத்திய ஆலோசனைக்குப் பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தநிலையில், ஆலை நிர்வாகம் இதனைப் புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே விதித்திருந்த மாசுக்கட்டுப்பாட்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிப்பட்டதை அடுத்து, ஆலை இயங்கவில்லை.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர், ஆலையை நிரந்தரமாக மூட கோரிக்கை வைத்தனர். ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அரசாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கையும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டது. மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இன்று (28.5.2018) வெளியிட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாமே அரசால் எடுக்கமுடியும் என்ற நிலையில், இவ்வளவு காலம் காத்திருந்தது எதற்காக? காலம் கடந்து எடுக்கப்பட்ட இந்த முடிவால் 13 அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கியதை தவிர்த்திருக்கலாம். கடந்த சில நாட்களாக துடிதுடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மீது குருதி கரை படாமல் இருந்திருக்கும். இப்படி காவு கொடுத்து, காவு கொடுத்துதான் உரிமைகளை மீட்டெடுக்கனுமா?
