ஈரான்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லி மற்றும் சென்னையில் 24x7 கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன.

Iran-Israel conflict : காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரான்-இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இஸ்ரேல் ராணுவம் ஈரான் அணு ஆயுத திட்டத்தை தயாரித்து வருவதாக இதனால் தங்கள் நாட்டை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக "ஆபரேசன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரானின் அணு ஆயுத நிலையங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது, இதில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள் மற்றும் இராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டனர். பதிலடியாக, ஈரான் "True Promise 3" என்ற பெயரில் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏவுகனைகள் ட்ரோன்கள் இஸ்ரேல் மீது ஏவி வருகிறது.

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் மோதல்

இதில் இஸ்ரேலின் இரும்பு கவச (Iron Dome) பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி சில ஏவுகணைகள் சேதத்தை ஏற்படுத்தின. ஏராளமானோர் இஸ்ரேலில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதே போல இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும், 90% பொதுமக்கள் என ஈரான் தெரிவித்தது. இஸ்ரேலில் 19 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அவசர சேவைகள் கூறியது . இந்த மோதலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இந்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் இஸ்ரேல் ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

தமிழர்களை மீட்க உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

இந்த சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

இதற்கென புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24x7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள் பின்வருமாறு:

தொலைபேசி : 011 24193300 (Land line)

கைப்பேசி எண்கள் : 9289516712 (Mobile Number with Whatsapp)

மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com

அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில், செயல்பட்டுவரும் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளவும், தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்குள் - 1800 309 3793

வெளிநாடு:

+91 8069009901/08069009901

+91 8069009900/08069009900 (Missed Call)